கண்ணியத்தோடு வாழ வேலை
கனவைத் தொடர சாலை! - இரண்டும் தாராத
கல்வி கற்று என்ன பயன் ?
இன்பத்தை வகுத்து விட்டு
இழப்பை பெருக்கிக் கொண்டு, முதிர்வதற்கு ,
இளமை இழந்து என்ன பயன் ?
சட்டைப் பையில் காந்தியில்லாதவருக்கு
சற்றே நீதி வழங்காத
சட்டம் காத்து என்ன பயன் ?
மனித உணர்வை மதியாத
மங்கும் நாட்டை நிமிர்த்தாத
மக்கள் ஆட்சியில் என்ன பயன் ?
பகுத்தறிவு சிறிதும் இல்லாமல்
பண்பையும் அன்பையும் தேடாமல் - வாழும்
பணம் படைத்தவரால் என்ன பயன் ?
ஈதல் தான் இல்லையென்றால்
ஈரம் கூட இல்லாமல்
ஈட்டி தாங்குபவரால் என்ன பயன் ?
இச்சகத்து நடக்கும் கொடுமையெலாம் - பார்த்துவிட்டும்
இருகண்ணிருந்தும் குருடாய் விளங்கும்
இறைவன் இருந்தாலும் என்ன பயன் ?
அறிவுக் கண் திறவாமல்
அன்பு மொழி கேளாமல் , திரிபவர்க்கு ,
அழகுக் கவிதை படித்தும் என்ன பயன் ?
Comments
Post a Comment